கால்பந்து மைதானத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்...!


கால்பந்து மைதானத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்...!
x

4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்து ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

தோகா,

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று 'ஈ' பிரிவில் நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி- ஜப்பான் அணிகள் மோதின. கலிபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணியின் முன்கள வீரர்களும் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர்.

ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதில் கோல் திருப்ப ஜப்பான் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி 1-0 என்ற கனக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து 2வது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தில் ஜெர்மனியே ஜெயிக்கும் என நினைத்து கொண்டிருந்த வேளையில் ரிஸ்து டோன் ( 75வது நிமிடம்), டகுமா ஆசானோ ( 83 நிமிடம்) அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இதற்கு பதில் கோல் திருப்ப ஜெர்மனி எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. முடிவில் 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், ஜெர்மனி- ஜப்பான் போட்டியை காண வந்த ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் கால்பந்து மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். போட்டியின்போது ரசிகர்கள் போட்டுவிட்டு சென்ற பதாகைகள், உணவு தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர்.

ஜப்பானியர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story