உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வி: நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வி: நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா
x

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தோல்வி எதிரொலியாக, நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்தார்.

தோகா,

தோகாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டு நெதர்லாந்து அணி வெளியேறியது. இதனை அடுத்து நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் 71 வயதான லூயிஸ் வான் கால் அந்த பதவியில் இருந்து விலகினார். அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை 3-வது முறையாக ஏற்றார்.

உலக கோப்பை பயணம் முடிவுக்கு வந்த பிறகு நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் கூறுகையில்,'இதுவே எனக்கு கடைசி ஆட்டமாகும். அணியின் பயிற்சியாளராக இனி நான் தொடரமாட்டேன். அருமையான திறமையும், உத்வேகமும் கொண்ட அணியை விட்டு நான் செல்கிறேன். 20 ஆட்டங்களில் நான் பயிற்சியாளராக இருந்து இருக்கிறேன். அந்த சமயத்தில் அணி எந்த ஆட்டத்திலும் தோற்கவில்லை என்பது பெருமை அளிக்கிறது. முதல் பாதியில் எங்களது ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. ஆனால் 2-வது பாதியில் கடுமையாக போராடி 2 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக பெனால்டி ஷூட்-அவுட்டில் தோற்றோம். இங்கு வந்ததில் இருந்து பெனால்டி அடிப்பதில் நிறைய பயிற்சி மேற்கொண்டு இருந்தோம். இதனால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பினோம்' என்றார்.


Next Story