கண்களை சுற்றி கருவளையமா..? காரணங்களும் தீர்வுகளும்..!


கண்களை சுற்றி கருவளையமா..? காரணங்களும் தீர்வுகளும்..!
x

தூக்கமின்மை மட்டுமல்ல, குறைவான நேர தூக்கமும்கூட கண்களுக்குக் கீழே கருவளையங்களை உண்டாக்கும்.

வறுமை, முதுமை, ஏழ்மை, பட்டினி, கவலை, களைப்பு, துயரம், துன்பம், சோகம் என ஏதாவது ஒன்றின் பிரதிபலிப்புதான் கண்களைச் சுற்றி கருவளையங்களை உண்டாக்கும் என்று பொதுவாக சொல்வதுண்டு. இது உண்மையும்கூட. கண்களைச் சுற்றி கருவளையங்கள் இருப்பவர்களைப் பார்க்கும்போது, இவர்கள் உடலாலோ அல்லது மனதாலோ ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தவுடனே தோன்றும். இவர்கள் பல வாரங்கள் பட்டினி கிடந்திருப்பார்களோ என்றுகூட எண்ணத் தோன்றும். சிலர் இதைக் கண்டுகொள்வதில்லை. சிலர், திடீரென்று ஏன் இப்படி கருமை வந்தது? என்று அலச ஆரம்பிப்பார்கள்.

கண்களைச் சுற்றி கருவளையங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்தக் கருமை, இந்த இருள் சூழ்ந்த தன்மை, வயது முதிர்வு, பரம்பரை, சில பொருட்களுக்கு ஒவ்வாமை, சரியான போதுமான தூக்கமின்மை, மெலனின் சருமத்தில் அதிகமாக இருப்பது, ரத்தச்சோகை, அதிக அளவில் சிகரெட் புகைத்தல் , அதிக அளவில் மது அருந்துதல் , அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், ஹேர்டை அடிக்கடி உபயோகிப்பவர்கள் போன்ற காரணங்களினால் ஏற்படலாம்.

சில நேரங்களில் நோயின் காரணமாக கண்கள் வீங்கிப் போயிருந்தால், கறுப்பாகத் தெரியும். சிலருக்கு கண்கள் குழி விழுந்து கண்கள் உள்ளே போய் இருந்தால், குழிவிழுந்த கண்களின் நிழல் கூட கண்களைச் சுற்றி கறுப்பு நிறத்தைக் காண்பிக்கும். இரண்டு கண்களுக்கும் கீழே கருமை வந்தால் , அதிகமாக பயப்படத் தேவையில்லை. சில வீட்டு வைத்தியங்களை செய்து பார்க்கலாம். அவை ஏதும் பலன் அளிக்காவிட்டால் , சரும நோய் சிகிச்சை நிபுணரைச் சந்தித்து உரிய ஆலோசனை பெறலாம். ஆனால் ஒரு கண்ணுக்குக் கீழே மட்டும் கருமை வந்தால், உடனடியாக சரும நோய் சிகிச்சை நிபுணரைச் சந்தித்து சிகிச்சையை ஆரம்பித்துவிடுவது நல்லது.

கருமையைப் போக்க சில வழிமுறைகள்:

1). நன்கு குளிர்ந்த ஈரமான மெல்லிய துணியை கண்களில் கருமை நிறமிருக்கும் இடங்களில் ஒற்றி ஒற்றி எடுக்கவேண்டும். இப்படிச் செய்யும்போது தோலுக்குக் கீழே இருக்கும் மிகமிகச் சிறிய ரத்தக் குழாய்கள் சுருங்க உதவி செய்யும்.

2). தலையை சற்று தூக்கி வைத்துப் படுக்கவேண்டும். இதனால் கண்ணின் கீழ் இமை வீங்குவது சற்று குறையும்.

3). தூக்கமின்மை மட்டுமல்ல, குறைவான நேர தூக்கமும்கூட கண்களுக்குக் கீழே கருவளையங்களை உண்டாக்கும். எனவே போதுமான நேரம் நன்றாகத் தூங்கவேண்டும்.

4). சூரிய ஒளி கதிர்வீச்சு தடுப்பு க்ரீம்களை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தடவலாம்.

5). மது அருந்துவதை குறைக்க வேண்டும்.

6). சிகரெட் பழக்கமும் கருமையைக் கூட்டும். எனவே புகைப்பழக்கத்தை குறைக்கவேண்டும்.

7). சூரிய ஒளியில் வேலை பார்க்கும்போது, புற ஊதாக் கதிர்களை பாதுகாக்கும் கறுப்பு கண்ணாடி அணிந்து கொள்ளவது நல்லது. தொப்பி அணிந்து கொள்ளலாம், குளுமையை உண்டாக்கும் க்ரீம்களைத் தடவிக் கொள்ளலாம்.

8). வெள்ளரிக்காய்த் துண்டுகளை கருவளையத்தின் மீது தடவி, ஒத்தடம் இடலாம். இதிலுள்ள குளிர்ச்சியானது கருமையை அதிகமாக்காது.

9). லேசர் சிகிச்சைகூட சிலருக்கு பலனளிக்கலாம்.

10). ஆரோக்கியமான, சத்தான, உணவுப் பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.

11). பழங்களும், காய்கறிகளும் சரும பாதுகாப்புக்கு மிகமிக முக்கியம்.

1 More update

Next Story