அடிக்கடி தலைவலி ஏற்படுவது ஏன்?

டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலிதான் நிறைய பேருக்கு இருக்கிறது.
சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். இதற்காக வலி மாத்திரைகளையும் தைலங்களையும் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக்கொள்வார்கள்.
தலையைச் சுற்றியும் , முகத்தைச் சுற்றியும் ஏற்படும் வலியே தலைவலி ஆகும். சிலருக்கு வலி நெற்றியோடு நின்றுவிடும். சிலருக்கு முன்னந்தலை, பின்னந்தலை முழுவதுமே வலிக்கும். சிலருக்கு முகமும் சேர்ந்து வலிக்கும்.
எரிச்சலடைந்த, சினமடைந்த, சேதமடைந்த, வீக்கமடைந்த தலை நரம்புகள் தான் தலைவலியை உண்டாக்குகின்றன. சுமார் 150-க்கும் மேலான தலைவலி வகைகள் இருக்கின்றன. மந்தமான வலி, சம்மட்டியைக் கொண்டு அடித்தாற்போல் வலி, தலையைக் கழட்டி வைத்துவிடலாம் போன்றதொரு வலி, விடாமல் தொடர்ந்து இருக்கும் வலி, ஊசியால் குத்துவது போன்றதொரு வலி, துடிக்கக்கூடிய வலி இப்படி வலிகள் பலவகையாக ஏற்படுவதுண்டு.
தலைவலியை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்காதவர்கள் இருப்பது கடினம். பெரும்பாலான தலைவலிகள் ஆபத்தானதல்ல. ஆனால் , சில தலைவலிகள் நமது உடலிலுள்ள மிகப்பெரிய பிரச்னைகளினால் வருவதாக இருக்கலாம்.
"அட, தலைவலிதானே கொஞ்சம் தைலத்தை எடுத்துத் தேய்த்தால் சரியாகிவிடும் என்று சொல்பவர்களும் உண்டு. அய்யோ, தலைவலியா, நான் கஷ்டப்பட்டது எனக்குத் தான் தெரியும். மருந்து, மாத்திரை, தைலம் எதுக்கும் கேட்கலை, கடைசியில் கயிற்றைப் போட்டு தலையைச் சுற்றி இறுக்கமாகக் கட்டினேன். அப்பொழுது தான் தலைவலி விட்டுச்சு" என்று சொல்பவர்களும் உண்டு.
பெரும்பாலான நாடுகளில் சுமார் 15 சதவீதம் பேர் தலைவலிக்கு மாத்திரை தான் எடுத்துக் கொள்கிறார்கள். அதோடு விட்டுவிடுகிறார்கள். தலைவலிக்கான காரணம் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
டென்ஷன் தலைவலி: இந்த வகை தலைவலி தான் அதிகமாக நிறைய பேருக்கு இருக்கிறது. இந்த நவீன காலத்தில் சின்னக் குழந்தைகள் கூட 'தலையைப் பிடித்துக் கொண்டு", ஒரே டென்ஷனா இருக்கு, தலை வலிக்குது, எல்லாரும் அமைதியா இருங்க" என்று சொல்லும் அளவிற்கு டென்ஷன் என்பது மிகமிகச் சாதாரணமாகிவிட்டது.
கடுமையான ஒற்றைத் தலைவலி: இதைத் தான் மைக்ரெயின் என்று மருத்துவ மொழியில் சொல்வதுண்டு. தினம் தினம் புதுப்புது பிரச்சினைகளினால் உண்டாகும் தலைவலி. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கலந்துள்ள நைட்ரேட் பொருள் , மதுவகைகளில் குறிப்பாக சிவப்பு ஒயின் , சிகரெட்டிலுள்ள நிகோட்டின் , கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் , கட்டுப்பாடில்லாத சர்க்கரை வியாதி உள்ளவர்கள், கண் பார்வை பிரச்சினை உள்ளவர்கள், நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், உடலில் அதிக நீரிழப்பு ஏற்பட்டவர்கள், சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள், சரியாக போதுமான நேரம் தூங்காதவர்கள், எந்நேரமும் கம்ப்யூட்டர் , லேப்டாப், செல்போன் , டிவி உபயோகிப்பவர்கள், கண் பார்வைக் குறைபாட்டிற்கு கண்ணாடி போடச் சொல்லியும் போடாதவர்கள், அடிக்கடி தொடர்ந்து தும்முபவர்கள், அடிக்கடி தொடர்ந்து இருமுபவர்கள், இவர்களுக்கெல்லாம் தலைவலி அடிக்கடி வந்துபோக வாய்ப்புண்டு.
இதுபோக , தினமும் தூங்கும் நேரம் மாறிவிட்டால், திடீரென கடின உடற்பயிற்சி செய்தால், சரியான வேளைக்கு உணவை உண்ணாமல் விட்டுவிட்டால் , தொடர்ந்து அதிக நேரம் சிரித்தால், அதிக நேரம் அழுதால், அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருந்தால், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தொந்தரவால், தினமும் தலைக்குக் குளித்தால், தலைக்குக் குளித்தபின் தலையைச் சரியாக துவட்டவில்லை என்றால் , மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து அதிகமாக உபயோகப்படுத்தினால், வயிறு சரியாக முழுவதும் காலியாகவில்லை என்றால், பார்க்கக்கூடாத சிலவற்றைப் பார்த்துவிட்டால், சென்ட் வாசனை, நாற்றம் போன்றவற்றை முகர்ந்தால், பிடிக்காதவர்களை பார்த்தால், பிடிக்காத சொல்லைக் கேட்டால் தலைவலி அடிக்கடி வந்துபோக வாய்ப்புண்டு.
சிறுநீரகம், மூளை போன்றவற்றுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலும் கடுமையான தலைவலி ஏற்படும். நாம் இதைக் கவனிப்பதை விட்டுவிட்டு, வேறு எதை எதையோ பார்த்துக் கொண்டிருப்போம்.
அன்றாட வேலைகளை தலைவலி பாதிக்கிறதா, அல்லது மன நிலையைப் பாதிக்கிறதா, மாற்றுகிறதா என்பதை டாக்டரிடம் விவரமாகச் சொல்லி தகுந்த ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறவேண்டும்.
பிடிக்காத சென்ட் , பிடிக்காத உணவு, பிடிக்காத பொருட்கள் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்டாலே தலைவலி தானாகவே பறந்துவிடும். தலைவலி என்பது ஒரு நோயல்ல. உடலில் மறைந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே. மனதில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையின் அறிகுறியே. எனவே எது நமது உடலுக்கு, மனதுக்கு ஒத்துவரவில்லை என்பதை முடிந்தவரை கண்டுபிடித்து அதைத் தவிர்ப்பது நல்லது.