சளி-இருமலை போக்கும் இயற்கை நிவாரணிகள்


சளி-இருமலை போக்கும் இயற்கை நிவாரணிகள்
x

ஒரு டம்ளர் சூடான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, தூங்குவதற்கு முன்பு குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பருவ நிலை மாறும்போது சளி, இருமல் போன்ற நோய் பாதிப்புகளுக்கு பலரும் ஆளாவதுண்டு. அப்போது நோயை எதிர்த்து போராடவும், தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உடலில் இருந்து அகற்றவும் உடல் உறுப்புகள் முயற்சிக்கும். உதாரணமாக ஒருவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, நோய் பாதிப்பை கட்டுப்படுத்த போராடும். அப்போது செய்ய வேண்டிய இயற்கை மருத்துவம் குறித்து காண்போம்...

இருமலுக்கு....

தேனில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை இருமலை கட்டுப்படுத்த உதவும். தொண்டைக்கு இதமளிக்கும். வெதுவெதுப்பான நீர் அல்லது மூலிகை தேநீரில் தேன் சேர்த்து பருகலாம். குறிப்பாக தூங்க செல்வதற்கு முன்பு குடிப்பது பலனளிக்கும்.

சளிக்கு...

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மூக்கடைப்பு ஏற்படுவதை தடுக்கும். தொண்டை வலியை குணப்படுத்த உதவும். சளி, இருமலை கட்டுப்படுத்தவும், உடலின் வெப்பநிலையை பராமரிக்கவும் உதவும்.

இஞ்சி துண்டை பொடித்து நீரில் கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து பருகலாம். தினமும் 2-3 முறை குடிப்பது பலன் தரும்.

மூக்கடைப்புக்கு...

தண்ணீரை கொதிக்க வைத்து, அகன்ற கிண்ணத்தில் ஊற்றி, சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்து ஆவி பிடிக்கலாம். இதனை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சளி சேருவது கட்டுப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

மஞ்சளில் குர்குமின் சத்து உள்ளது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. ஒரு டம்ளர் சூடான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, தூங்குவதற்கு முன்பு குடிக்கலாம்.

இரண்டு, மூன்று நாட்கள் கடந்தும் சளி, இருமல் கட்டுக்குள் வரவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

1 More update

Next Story