முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு
மாநிலங்களவை பதவிக்காக முதல்-அமைச்சரை சந்திக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பெற்ற வெற்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம், மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக நேற்று முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்து முதல்-அமைச்சரை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
முன்னதாக முதல்-அமைச்சரை சந்திக்க வந்த கமல்ஹாசனிடம், முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்தீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், "Celebrating CM" என ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.
முதல்-அமைச்சர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "மாநிலங்களவை சீட்டுக்காக நன்றி தெரிவிக்க வந்தீர்களா என செய்தியாளர்கள் கேட்டார்கள். சீட் முடிவு செய்யப்பட்டு கட்சியில் முடிவு செய்து அறிவிக்கும்போது நன்றி சொல்ல வருவோம். இப்போது வந்திருப்பது கொண்டாடுவதற்காக. இந்த தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு, கவர்னர் வழக்கில் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றிக்கு பாராட்டு சொல்ல வந்தேன். நமக்கு சாதகமானது என்பதை விட இந்தியாவிற்கு சாதகமானது. இந்த தீர்ப்பு இவர்கள் போட்ட வழக்கில் வந்திருக்கிறது என்பதால் கொண்டாடப்பட வேண்டியவர் முதல்-அமைச்சர் . தேசிய அளவில் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்றார்.








