ஏர்டெல் சேவை பாதிப்பு - பயனர்கள் கடும் அவதி

ஏர்டெல் சேவை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை,
இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் பிரதான மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. மற்ற நிறுவனங்கள் சேவை வழங்கினாலும், இந்த இரு நிறுவனங்களுக்கே அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதேபோல், இந்திய மொபைல் நெட்வொர்க் சந்தையிலும் இவை இரண்டு நிறுவனங்களே போட்டி நிறுவனங்களாக இருந்து வருகின்றன.
இந்தநிலையில் சென்னை, மதுரை, கோவை, தஞ்சை, தென்காசி,நாகை உள்ளிட்ட நகரங்களில் ஏர்டெல் சேவை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்துள்ளனர். சிக்னல் கிடைக்காததல் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஏர்டெல் சேவை முடக்கத்தால் வணிகர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நான்கு மணி நேரத்திற்குள் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரி செய்யப்படும் என ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய குழு தகவல் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 3 சதவீதம் சரிந்து, ரூ.11,022 கோடியாக உள்ளதாக சில மணி நேரத்திற்கு முன் அந்நிறுவனம் அறிவித்த நிலையில், ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.






