டெல்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி; ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.


டெல்லி சட்டசபை தேர்தல்:  48 தொகுதிகளில் வெற்றி; ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.
x
தினத்தந்தி 8 Feb 2025 4:35 PM IST (Updated: 8 Feb 2025 11:34 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பெற 36 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது. இது அக்கட்சியினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 6.30 மணியளவில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பெற 36 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. 48 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதனால், அக்கட்சி 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது.

1 More update

Next Story