நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் காலமானார்

பாஜக தேசிய செயலாளர், தேசிய துணைத்தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்பு வகித்தவர் இல.கணேசன்.
சென்னை,
நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வந்தவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8-ந்தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒரு வாரமாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து கவர்னருமான இல.கணேசன் (வயது 80) காலமானார். 8 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தநிலையில் மாலை 6.23க்கு இல.கணேசன் உயிர் பிரிந்தது.
இல.கணேசன் பொது வாழ்க்கை
தஞ்சை மாவட்டத்தில் 16 பிப்ரவரி 1945-ம் ஆண்டு லக்குமி ராகவன் - அலமேலு தம்பதிக்கு பிறந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு, திருமணம் செய்யாமல் பொதுவாழ்வுக்கு வந்தவர் இல.கணேசன். பாஜக செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தவர் இல.கணேசன். 1991-ல் அமைப்பு செயலாளர் ஆனார்.
2009, 2014 மக்களவை தேர்தல்களில் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றார். 2016-ல் மத்திய பிரேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல.கணேசன்.பாஜக தேசிய செயலாளர், தேசிய துணைத்தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்பு வகித்தவர். 2021 ஆக 27-ல் மணிபூர் கவர்னராக இல.கணேசன் பொறுப்பேற்று 19 பிப்.2023 வரை பணியாற்றினார்.
இடையே 2022-ம் ஜூலை 18- நவம்பர் 17 வரை மேற்கு வங்க மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்தார். 2023 பிப்ரவரி 20 முதல் நாகாலாந்து மாநில கவர்னராக இல.கணேசன் பொறுப்பு வகித்து வந்தார். கண்ணியமான பேச்சுக்கும் கணீர் தமிழக்கும் அறியப்பட்டவர்.தமிழ்நாட்டில் பாஜகவை கடைக்கோடிக்கும் சென்று சேர்ந்தவர் இல.கணேசன்.






