பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் பாராட்டு விழா

முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்டார். தமிழகத்தில் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டை போலவே நடிகர் விஜய் இந்த ஆண்டும் 10, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை அழைத்து சென்னையில் வைத்து பாராட்டி கல்வி விருது வழங்க உள்ளார். அந்த வகையில், 2025-ம் ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் பரிசளிக்கிறார். முதல்கட்டமாக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில், மாணவ-மாணவியருக்கு விஜய் பரிசளிக்கிறார்.முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2 கட்டங்களாக பரிசளிப்பு விழா நடந்த நிலையில் இம்முறை 3 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்ட உள்ளார்.
முதற்கட்டமாக 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று, மாமல்லபுரத்தில் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.மாணவச் செல்வங்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் அன்பும் அக்கறையும் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார். என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






