வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை: "எந்த உச்சத்தை தொடுமோ..?" விழிபிதுங்கும் மக்கள்


வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை: எந்த உச்சத்தை தொடுமோ..? விழிபிதுங்கும் மக்கள்
x
தினத்தந்தி 8 Oct 2025 9:24 AM IST (Updated: 8 Oct 2025 6:06 PM IST)
t-max-icont-min-icon

தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்து 600-க்கு நேற்று விற்பனையானது.

சென்னை,

அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது..

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 உயர்ந்துள்ள போதிலும் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.167-க்கு விற்பனையானது மக்கள் மனதில் சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை இன்னும் 13 நாட்களில் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை எந்த உச்சத்தை தொடுமோ! என்ற அச்ச உணர்வு பொதுமக்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை உயர்வு என்பது ஏழை எளிய மக்களுக்கு இனி தங்கம் எட்டாக்கனியாகிவிடும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றனர். ஆனால், தங்கத்தின் விலையோ எதைப்பற்றியும் கவலையின்றி புதிய புதிய உச்சங்களை தொட்டவண்ணம் உயர்ந்து கொண்டே போகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

08.10.2025 ஒரு சவரன் ரூ.90,400 (இன்று)

07.10.2025 ஒரு சவரன் ரூ.89,600 (நேற்று)

06.10.2025 ஒரு சவரன் ரூ.89,000

05.10.2025 ஒரு சவரன் ரூ.87,600

04.10.2025 ஒரு சவரன் ரூ.87,600

03.10.2025 ஒரு சவரன் ரூ.87,200

1 More update

Next Story