ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரன் ரூ. 90 ஆயிரத்தை நெருங்கியது

ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை, நேற்று ஒருசவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டது.
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வரும் தங்கம் விலை சீரான இடைவெளியில் இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதன்படி கடந்த மாதம் 6-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அதன் பின்னரும் தங்கம் விலை ஓய்வில்லாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.
இதையடுத்து அதே மாதம் 9-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.81 ஆயிரத்தையும், 16-ந் தேதி ரூ.82 ஆயிரத்தையும், 22-ந் தேதி ரூ.83 ஆயிரத்தையும், 23-ந் தேதி ரூ.85 ஆயிரத்தையும், 29-ந் தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந் தேதி ரூ.87 ஆயிரத்தையும் கடந்தது. ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை தொடர்ந்து மேல்நோக்கியே நிற்காமல் சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த 4-ந் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது 5-ந் தேதியும் மாற்றமின்றி தொடர்ந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் அதிரடியாக ரூ.110 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 60-க்கும், ரூ.880 அதிகரித்து சவரன் ரூ.88 ஆயிரத்து 480-க்கும் தங்கம் விற்பனையானது.
மாலையில் மேலும் ரூ.65 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 125-க்கும், ரூ.520 அதிகரித்து சவரன் ரூ.89 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்து முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருப்பது இல்லத்தரசிகளுக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.42 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. இது தற்போது ரூ.89 ஆயிரமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46 ஆயிரத்து 720 அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று (07-10-2025) மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கும், சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 600-க்கும் தங்கம் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.2 அதிகரித்து கிராம் ரூ.167-க்கும், ரூ.2,000 அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையிலே, அதாவது கிராம் ரூ.167-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
07.10.2025 ஒரு சவரன் ரூ.89,600 (இன்று)
06.10.2025 ஒரு சவரன் ரூ.89,000 (நேற்று)
05.10.2025 ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 ஒரு சவரன் ரூ.87,200
02.10.2025 ஒரு சவரன் ரூ.87,600






