நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை.. ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிறதா..?


நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை.. ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிறதா..?
x
தினத்தந்தி 9 Oct 2025 9:20 AM IST (Updated: 9 Oct 2025 11:11 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை கடந்த 10 மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.30 ஆயிரம் அதிகரித்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை,

அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இதன்படி கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

கடந்த மாதம் 8-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சவரன் ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. நேற்று காலை ரூ.100 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 300-க்கும், ரூ.800 அதிகரித்து சவரன் ரூ.90 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.

அடுத்து 2-வது முறையாக மதியம் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது மேலும் ரூ.85 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 385-க்கும், ரூ.680 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது மேலும் ரூ.15 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ரூ.120 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அது, கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31 ஆயிரத்திற்கு மேல் விலை உயர்ந்திருக்கிறது.தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஜி.எஸ்.டி., செய்கூலி உள்ளிட்டவற்றை சேர்த்தால் நகையாக வாடிக்கையாளரிடம் வந்து சேரும் தங்கம் சவரன் விலை ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடுகிறது. தங்கம் விலை ஜெட் வேகத்தில் செல்வதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் சவரன் ரூ.1 லட்சத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இருக்கும் தங்கத்தை பாதுகாத்தாலே லட்சாதிபதியாக தொடரலாம் என்பதே பெரும்பாலானோரின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.167-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்று ரூ.3 அதிகரித்து கிராம் ரூ.170-க்கும், ரூ.3 ஆயிரம் அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து கிராம் ரூ.171-க்கும், ஆயிரம் ரூபாய் அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம்-வெள்ளி விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

காரணம் என்ன?

இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் கோல்டுகுரு சாந்தகுமார் கூறுகையில், “அமெரிக்காவில் பொருளாதாரம் பின்தங்கியநிலையில் இருக்கிறது. இந்தியா மீது திணிக்கப்பட்ட வர்த்தக போர், நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தில் அதிகமானோர் முதலீடு செய்துவருகின்றனர். இதுவே தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணம் ஆகும்.

தற்போது செல்வதை பார்த்தால் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. இல்லாதபட்சத்தில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் இந்த விலையை கண்டிப்பாக எட்டிவிடும் என்று கருதுகிறோம்” என்று தெரிவித்தார்.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

09.10.2025 ஒரு சவரன் ரூ.91,200 (இன்று)

08.10.2025 ஒரு சவரன் ரூ.91,080 (நேற்று)

07.10.2025 ஒரு சவரன் ரூ.89,600

07.10.2025 ஒரு சவரன் ரூ.90,400

06.10.2025 ஒரு சவரன் ரூ.89,000

05.10.2025 ஒரு சவரன் ரூ.87,600

04.10.2025 ஒரு சவரன் ரூ.87,600

1 More update

Next Story