மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்தை தொட்டது


மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்தை தொட்டது
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Oct 2025 5:00 PM IST (Updated: 11 Oct 2025 5:03 PM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.680 அதிகரித்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னை

அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்தது. 2 நாட்களுக்கு பிறகு, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது.

மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,340-க்கும், ஒரு சவரன் ரூ.90,720-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.92 ஆயிரம் என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாலையில் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி மாலையில் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் அதிகரித்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

1 More update

Next Story