அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

கோப்புப்படம்
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) உயர்ந்து கொண்டே வந்து, ஆண்டின் இறுதியில் சற்று விலை குறைந்து காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த 5-ந்தேதி ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,060-க்கும், ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.535-ம், சவரனுக்கு ரூ.4,280-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.107-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.