விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் டாப் 10 பட்டியல்; அமெரிக்கா, சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதம் (4.19 லட்சம் கோடி) என்ற அளவில் முன்னணியில் உள்ளது.
நியூயார்க்,
உலக அளவில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் டாப் 10 பட்டியல் பற்றிய விவரங்களை, சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான். ஆனால், பெரிய நாடுகள் என்றில்லாமல், பொருளாதாரம் எப்படி விரைவாக விரிவடைகிறது என்ற அடிப்படையிலேயே வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.
இதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) சதவீதத்தில் ஏற்படும் மாற்றம், உயர்ந்த வளர்ச்சி விகிதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அமெரிக்க டாலர் மதிப்பின்படி, பட்டியலிடப்பட்ட இந்த நாடுகளில், அமெரிக்காவின் பொருளாதாரம் 30.51 லட்சம் கோடி என்ற அளவில் முதல் இடத்தில் உள்ளபோதும், அதன் வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் வர்த்தக பதற்றநிலை காணப்பட்டபோதும், வலுவான நுகர்வோர் செலவினம் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு ஆகியவை முதல் இடம் என்ற பெருமையை அந்நாடு தக்க வைத்து கொள்ள உதவியாக அமைந்துள்ளன.
இந்த வரிசையில் சீனா 19.23 லட்சம் கோடி, ஜெர்மனி 4.7 லட்சம் கோடி என முறையே 2-ம் மற்றும் 3-ம் இடங்களை பிடித்துள்ளன. எனினும், வளர்ச்சி விகிதத்தில் அந்நாடுகள் முறையே 4 சதவீதம் மற்றும் -0.1 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளன.
இந்த பட்டியலில் 4.19 லட்சம் கோடியுடன் இந்தியா 4-ம் இடத்தில் உள்ளது. எனினும், நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதம் என்ற அளவில் முன்னணியில் உள்ளது. டாப் 10 வரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால், விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் டாப் 10 பட்டியலில், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்த வரிசையில், ஜப்பான் 4.19 லட்சம் கோடி (0.6 சதவீதம்) என்ற அளவில் 5-ம் இடத்திலும், இங்கிலாந்து 3.84 லட்சம் கோடி (1.1 சதவீதம்) என்ற அளவில் 6-ம் இடத்திலும், பிரான்ஸ் 3.21 லட்சம் கோடி (0.6 சதவீதம்) என்ற அளவில் 7-ம் இடத்திலும், இத்தாலி 2.42 லட்சம் கோடி (0.4 சதவீதம்) என்ற அளவில் 8-ம் இடத்திலும், கனடா 2.23 லட்சம் கோடி (1.4 சதவீதம்) என்ற அளவில் 9-ம் இடத்திலும், பிரேசில் 2.13 லட்சம் கோடி (2.0 சதவீதம்) என்ற அளவில் 10-ம் இடத்திலும் உள்ளன.






