நீட் தேர்வு எப்படி இருந்தது? - மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்து!

கடந்த ஆண்டு (2024) நீட் தேர்வு வினாத்தாளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு (2025) வினாத்தாள் கடினமானது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீட் தேர்வு
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்த, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்கண்ட மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அதேபோல் ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு கடந்த வாரம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், பாட வாரியாக நீட் தேர்வு எப்படி இருந்தது என மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறியவை பின்வருமாறு;
இயற்பியல்
பல மாணவர்கள் இயற்பியல் பாடக் கேள்விகள் கடினமாக இருந்ததாக உணர்ந்துள்ளனர். இயற்பியலில் நேரடிக் கேள்விகளை விட, கணக்கீடு செய்து பதில் அளிக்கும் கேள்விகள் அதிகம் இடம்பெற்றிருந்ததாகவும், இதனால் கணக்கீடு செய்து பதில் அளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் கூறினர்.
அதாவது, வினாத்தாளில் இயற்பியலுக்காக மொத்தம் உள்ள 45 வினாக்களில் கிட்டத்தட்ட 40 வினாக்களுக்கு கணக்கீடு செய்தே பதில் அளிக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டனர்.
வேதியியல்
வேதியியலைப் பொருத்தவரை உயிரி வேதியியல் பிரிவு கேள்விகள் எளிமையாக இருந்ததாகக் கூறினர். எனினும், என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் இருந்து நேரடியாக வினாக்கள் இடம்பெறாமல், வேதி சமன்பாடுகளுக்குத் தீர்வு கண்டு பதில் அளிக்கும் விதமாக சில கேள்விகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
உயிரியல்
இயற்பியல், வேதியியலை ஒப்பிடும்போது உயிரியல் பாடக் கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். கேள்விகள் சற்று நீளமானதாக இருந்தாலும், புரிந்துகொண்டால் எளிதில் பதிலளிக்கும்படி இருந்ததாகவும் மாணவர்கள் கூறினர். எனினும், கேள்விகள் பெரிதாக இருந்ததால், புரிந்துகொள்வது சற்று கடினமாக இருந்ததாகவும் சிலர் குறிப்பிட்டனர்.
* கடந்த ஆண்டு (2024) நீட் தேர்வு வினாத்தாளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு (2025) வினாத்தாள் கடினமானது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
* 2025 இளநிலை நீட் வினாத்தாளில் ஒட்டுமொத்தமாக 78% கேள்விகள் பதில் அளிக்கக் கூடியதாக இருந்ததாக, ஆங்கில ஊடகம் நடத்திய பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.
* நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.






