தமிழக அரசு வேலை.. 76 பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

இந்த பணிகளுக்கான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
உதவி வேளாண் இயக்குநர் (விரிவாக்கம்), முதுநிலை அலுவலர் (நிதி) உள்ளிட்ட 14 பதவிகளில் 76 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பணிகளுக்கான கணினி வழித் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், வரும் ஜனவரி 20-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிக்கையின்படி, கணக்கு அலுவலர் (கிரேடு-3) பதவிக்கு 8 இடங்கள், உதவி வேளாண் இயக்குநர் (விரிவாக்கம்) பதவிக்கு 26 இடங்கள், உதவி மேலாளர் (கணக்கு) பதவிக்கு 9 இடங்கள், உதவி மேலாளர் (சட்டம்) பதவிக்கு 3 இடங்கள் மற்றும் முதுநிலை அலுவலர் (நிதி) பதவிக்கு 21 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதனுடன் சேர்த்து மற்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பதவிகளும் இந்த ஒருங்கிணைந்த தேர்வின் கீழ் அடங்குகின்றன. தேர்வு முறையைப் பொறுத்தவரை, கணினி வழித் தேர்வில் மூன்று தாள்கள் இடம்பெறும். இதில் கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள், பொது அறிவு தாள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடத்தாள் ஆகியவை அடங்கும். கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவார்கள்.
இந்த தமிழ்த் தாளின் மதிப்பெண்கள் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. ஆனால், தமிழ்த் தாளில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெறத் தவறினால், அந்த தேர்வரின் பொது அறிவு மற்றும் பாடத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அனைத்து தேர்வர்களும் கட்டாய தமிழ்த் தாளில் தேர்ச்சி பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 21 வயதை நிறைவுப் பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு கிடையாது. பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு பின்பற்றப்படும். கைப்பெண்களுக்கு எந்த வகுப்பை சேர்ந்தவராக இருப்பினும் வயது வரம்பு கிடையாது.
இப்பணியிடங்களுக்கு வேளாண்மையில் முதுகலை பட்டப்படிப்பு, CA/ICWA, இளங்கலை சட்டப்படிப்பு, மார்க்கெட்டிங் எம்பிஏ, மெக்கானிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பொறியியலுடன் மெட்டிரியல் மேனேஜ்மெண்ட் டிப்ளமோ, எலெக்ட்ரிக்கல் பொறியியல் ஆகிய கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tnpsc.gov.in/document/english/CTS-II English1_2025.pdf






