குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

2025 ஆகஸ்ட் மாதம் வரை 15,504 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார்.
சென்னை,
டின்பிஸ்சி தலைவர் பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "குரூப் 2 தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் சுமுகமாக நடந்துள்ளது. சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 645 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 விண்ணப்பித்தனர். ஓஎம்ஆர் கேள்வித்தாள் முறையில் நடைபெறும் இத்தேர்வில் 200 கேள்விகள் இடம்பெறும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும்.
அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் மாதம் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி இந்த ஆண்டு 7 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 6 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், குரூப் 4 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 பணியிடங்களில் 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. நேற்று கூடுதலாக 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 4,662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும். 2026 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி-யின் கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அது டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும். 2024 ஆம் ஆண்டு 10,701 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2025 ஆகஸ்ட் மாதம் வரை 15,504 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் 9,725 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.






