கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு

கோவிலுக்கு செல்லும் வழியில் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இன்று சிஹாகானைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 15 பேர் ஒரு காரில் கார்குபூரில் உள்ள பிருத்வி நாத் கோவிலுக்கு சென்றனர். இந்த நிலையில் செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக கார் சரயு கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
கார் நீரில் மூழ்குவதை நேரில் கண்ட சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்டனர். மேலும் காயமடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






