153 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்: பிரசாந்த் கிஷோரை தாக்கிய பா.ஜ.க.

எங்களுடைய கட்சியால் அறிவிக்கப்பட்ட 3 வேட்பாளர்கள் கட்டாயத்தின் பேரில், அவர்களின் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர் என பிரசாந்த் கிஷோர் கூறினார்.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் தேர்தலில், ஜன சுராஜ் கட்சி சார்பில் 153 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இதுபற்றி இன்று பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், பிரசாந்த் கிஷோர் அவரை அரசியல் நிபுணராக நினைத்து கொள்கிறார். அவருடைய முக்கிய தலைவர்கள் யாரையும் தேர்தலில் அவர் நிறுத்தவில்லை. ஏனெனில், அவர்கள் போட்டியிட்டால், அவர்களின் டெபாசிட் பறிபோக கூடும்.
இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வரலாறு படைப்பார். அவருடைய 153 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள். இதன்பின்னர், அது ஒரு வரலாற்று கட்சியாக மாறும் என கூறினார். பிரசாந்த் கிஷோர் நேற்று பேசும்போது, பீகார் சட்டசபை தேர்தலுக்கான போட்டியில் இருந்து ஜன சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் வாபஸ் பெற கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர்.
லாலுஜியின் பதவி காலத்தில் பூத்துகள் சூறையாடப்பட்டன. 2020 ச தேர்தலில் முடிவுகள் கொள்ளையடிக்கப்பட்டன. முதன்முறையாக வேட்பாளர்கள் கொள்ளையடிக்கப்படுகின்றனர் என கூறினார். மத்திய உள்துறை மந்திரி, மத்திய கல்வி துறை மந்திரி ஆகியோர் கூறுவதன் பேரில், பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெறுகிறார்கள் என பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.
கடந்த 3 முதல் 4 நாட்களில் எங்களுடைய கட்சியால் அறிவிக்கப்பட்ட 3 வேட்பாளர்கள் கட்டாயத்தின் பேரில், அவர்களின் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். எங்களை அச்சுறுத்தும் சூழலை உருவாக்க பா முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார். இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் பேசியுள்ளார்.






