கரூர் நெரிசல் சம்பவ விசாரணையை மேற்பார்வையிட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடத்திய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு ஒரு நபர் விசாரணையையும், காவல்துறை சிறப்பு விசாரணையையும் நடத்தியது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இது மட்டுமின்றி சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த குழுவில், தமிழகத்துக்காக நியமனம் செய்யப்பட்ட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை தேர்வு செய்யவும் குழு தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கிடையே சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் மேற்பார்வை குழுவுக்கு 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லை பாதுகாப்பு படையில் ஐ.ஜி.யாக பணிபுரியும் தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி சுமித் சரண் மற்றும் டெல்லியில் ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி.யாக பணிபுரியும் தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி சோனல் வி.மிஸ்ரா என்ற பெண் அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் சுமித் சரண், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கோவை நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சோனல் வி.மிஸ்ரா சென்னை, திருச்சி, ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரியில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






