கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு 2 நாட்களில் 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை


கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு 2 நாட்களில் 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
x
தினத்தந்தி 10 Nov 2025 11:44 AM IST (Updated: 10 Nov 2025 5:47 PM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.30.4 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதை கடந்த டிசம்பர் 30-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அத்துடன், கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

அந்த வகையில் வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கன்னியாகுமரிக்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், அங்குள்ள கண்ணாடி பாலத்தை பார்வையிட்டனர். இதன்படி, கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு கடந்த 2 நாட்களில் மட்டும் (சனி, ஞாயிறு) 22 ஆயிரத்து 892 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.30.4 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story