திருமணத்திற்கு மறுத்த காதலனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்

நூர்ஜஹானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டம் சசாங் கிராமத்தை சேர்ந்தவர் முகமது முன்டஜிர் (வயது 34). இவரும் சத்ரா மாவட்டம் லம்டா கிராமத்தை சேர்ந்த நூர்ஜஹான் (வயது 24) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், முகமது நேற்று மாலை தனது காதலி நூர்ஜஹானானின் கிராமத்திற்கு சென்றுள்ளார். கிராமத்தில் வைத்து இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, திருமணம் குறித்து நூர்ஜஹான் தனது காதலனிடம் கேட்டுள்ளார்.
அப்போது, நூர்ஜஹானை திருமணம் செய்ய முகமது மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நூர்ஜஹான் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் காதலன் முகமதுவை சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் முகமது ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
முகமதுவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற கிராமத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், முகமதுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த கொலை குறித்து அறிந்த போலீசார், காதலன் முகமதுவை கொலை செய்த நூர்ஜஹானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், நூர்ஜஹானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






