4 ஆண்டு காதல்; இளம்பெண்ணை கைப்பிடிக்க, பணம் கையை கடிக்க... உறவினரிடம் கைவரிசை காட்டிய வாலிபர்

ஸ்ரேயாசிடம் இருந்து 416 கிராம் தங்க நகைகள், ரூ.3.46 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஹெப்பகோடி பகுதியில் வசித்து வருபவர் ஹரீஷ். இவருடைய கடையில் ஸ்ரேயாஸ் (வயது 22) என்பவர் வேலை செய்து வருகிறார். ஸ்ரேயாஸ் 4 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த இளம்பெண் கூறி வந்துள்ளார்.
ஆனால், ஸ்ரேயாசிடம் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போதிய பணம் கைவசம் இல்லை. இதனால் என்ன செய்வதென்று யோசித்த அவருக்கு ஒரு யோசனை உதித்தது. அவருடைய உறவினரான ஹரீஷிடம் நகை, பணம் நிறைய உள்ளது என தெரிந்து, அவற்றை கொள்ளையடிக்க திட்டமிட்டார்.
இதன்படி, ஹரீஷ் வெளியூர் சென்றபோது அவருடைய வீட்டுக்குள் புகுந்து 416 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.3.46 லட்சம் பணம் என கையில் கிடைத்தவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றார். இதுபற்றி தெரிய வந்ததும் ஹரீஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்தனர். அவர் ஹரீஷின் உறவினரான ஸ்ரேயாஸ் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 416 கிராம் தங்க நகைகள், ரூ.3.46 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.52.32 லட்சம் ஆகும். காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.






