சத்தீஷ்காரில் 50 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

39 பெண்கள் உள்பட மொத்தம் 50 பேர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் அமைப்பை சேர்ந்த பலர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கர் மாவட்டம் கோயலிபேடா பகுதியில் உள்ள கம்தேரா முகாமில், எல்லை பாதுகாப்பு படையினரிடம் நக்சல் அமைப்பை சேர்ந்த 39 பெண்கள் உள்பட மொத்தம் 50 பேர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். முன்னதாக நேற்றைய தினம்(14-ந்தேதி), மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் சுமார் 60 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






