டெல்லியில் தர்காவின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; 6 பேர் பலி

டெல்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள புராதானச் சின்னமான ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் உள்ள தர்காவின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் மழைக்கு 12-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில் நேற்றும் அதிகாலையில் கனமழை பெய்தது. சில இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பிறகு மழை பெய்ய தொடங்கிவிட்டது. மழை இடைவிடாது விடிய விடிய பெய்தது. விடிந்த பிறகும் வெளுத்து வாங்கியது. காலை 10 மணிக்கு பிறகும் லேசான மழை பல இடங்களிலும் பெய்து கொண்டே இருந்தது. பகல் ஒரு மணிக்கு பிறகும் கூட தூறல் இருந்தது.
டெல்லியைப் பொறுத்தவரை குறிப்பாக லஜ்பத் நகர், ஆர்.கே.புரம், லோதி ரோடு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது.இடைவிடாத இந்த கனமழையால் டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பல இடங்களில் வெள்ளம் குளமாக தேங்கி நின்றது. வாகனங்கள் அதில் நீந்தியபடியே சென்றன. வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
சுவர்கள் இடிந்து விழுந்து சில பாதிப்புகள் ஏற்பட்டன. ரெயில் மற்றும் விமான போக்குவரத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. பல விமானங்கள் தாமதத்தை சந்தித்தன.
டெல்லியைப் போல நொய்டா, குருகிராம் பரிதாபாத், காசியாபாத் போன்ற இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் டெல்லி எல்லை சாலைகளில் தண்ணீர் தேங்கி மிக அதிக அளவிலான போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியது. மழையின் இந்த வேகத்தால் டெல்லி மற்றும் சுற்றுப்புற இடங்களுக்கு நேற்று சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ஹூமாயூன் கல்லறையில் ஷரீப் பதே ஷா தர்ஹா உள்ளது. இதன்மேற்கூரை இன்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. 15 முதல் 20 பேர் சிக்கிக் கொண்டனர் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாபரின் மகனான ஹூமாயூன் 1556 ல் காலமானார். இதன் பிறகு, 1558ம் ஆண்டில், இவரது நினைவாக அவர் மனைவி பேகா பேகம் இந்த கல்லறையை கட்டினார். பாரசீக கட்டட கலைஞர்கள் இந்த கல்லறையை வடிவமைத்தனர்.






