கர்நாடகாவில் 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மழை: சித்தராமையா

Photo Credit: PTI
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள்.
மங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 26.44 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நேற்றும் தட்சிண கன்னடாவில் கனமழைக்கு 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். தேரளகட்டே அருகே பெல்மா கிராமத்தில் கனகெரே பகுதியில் வீடு இடிந்து 10 வயது சிறுமி பாத்திமா இறந்தாள்.
மேலும் உல்லால் அருகே மஞ்சநாடி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மொன்டே பதவு பகுதியில் உருமனே கோடி என்ற இடத்தில் நிலச்சரிவில் வீடு இடிந்து பிரேமா(வயது 65), அவரது மருமகள் அஸ்வினி(30), பேரன்கள் ஆர்யன்(2½), ஆருஷ்(1½) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா உஜ்ஜிரி கிராமத்தைச் சேர்ந்த விஜேஷ் ஜெயின்(27) என்ற மின்வாரிய ஊழியர் மழையால் சரிந்து விழுந்த மின்கம்பத்தை மீண்டும் சீரமைத்த போது மின்சாரம் தாக்கி பலியானார். இதேபோல் மங்களூரு அருேக தொட்டபெங்கெரே பகுதியை சேர்ந்த யஷ்வந்த்(38), கமலாக்ஷா(32) ஆகிய 2 பேர் ஒரு சிறிய படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் பேய்மழைகாரணமாக கடலில் படகு மூழ்கி அவர்கள் 2 பேரும் பலியானார்கள். இதன்மூலம் நேற்று ஒரேநாளில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கர்நாடகாவில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மழை பெய்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், 28 மாவட்டங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு பெய்து வருகிறது, இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.






