இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் - காரணம் என்ன?


இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் - காரணம் என்ன?
x

இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சமூக வலைதளங்களில் ஒன்றாக வாட்ஸ்அப் திகழ்கிறது. பயனர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. கூடுதலாக வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டா ஏ.ஐ. சாட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அதே சமயம், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மோசடி செயல்களை கட்டுப்படுத்தி, பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வாட்ஸ்அப் செயலியின் தாய் நிறுவனமான 'மெட்டா', பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை 'மெட்டா' நிறுவனம் முடக்கியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 4(1)(d) மற்றும் பிரிவு 3A(7) ஆகியவற்றின்படி, இந்தியாவில் சுமார் 80 லட்சத்து 45 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கணக்குகளை முடக்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நடைபெற்றதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட கணக்குகளில், 1 லட்சத்து 66 ஆயிரம் கணக்குகள் கடுமையான விதிமீறல்கள் காரணமாக உடனடியாக முடக்கம் செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள கணக்குகள் விசாரணைக்கு பின்னர் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களை 'வாட்ஸ்அப்' நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

• சேவை விதிமுறைகளை மீறுதல்: இதில் மொத்தமாக செய்திகளை அனுப்புதல், ஸ்பேம் (Spam) செய்தல், மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் தவறாக வழிநடத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களைப் பகிர்தல் போன்ற செயல்பாடுகள் அடங்கும்.

• சட்டவிரோத நடவடிக்கைகள்: உள்ளூர் சட்டங்களின் கீழ் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவும் கணக்குகள் முடக்கப்பட்டன.

• பயனர் புகார்கள்: அச்சுறுத்தல், துஷ்பிரயோகம் அல்லது பொருத்தமற்ற நடத்தை தொடர்பான பயனர் புகார்களின் அடிப்படையில் வாட்ஸ்அப் நடவடிக்கை எடுக்கிறது. தீங்கு விளைவிக்கும் கணக்குகளை அடையாளம் கண்டு முடக்குவதற்கு இந்தப் புகார்கள் முக்கிய காரணிகளாக உள்ளன.

வாட்ஸ்அப் செயலி ஒரு முக்கிய தகவல் தொடர்பு கருவியாக மாறியுள்ள சூழலில், அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சூழலை கொடுக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருப்பதாக 'மெட்டா' நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story