‘இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமர் ஆவார்’ - அசாம் முதல்-மந்திரி பேச்சு

அரசியலமைப்பு சட்டப்படி, யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
திஸ்பூர்,
மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தல் வரும் 15-தேதி நடைபெற உள்ளது. இதில் ஐதராபாத் எம்.பி.யான ஓவைசியின் எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் களமிறங்கியுள்ளது. இதனையொட்டி, மராட்டியத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், “இந்தியாவின் அரசியலமைப்பு சாசனம் அனைத்து சமூக மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குகிறது. ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக ஒருநாள் வருவார். அப்போது நான் உயிருடன் இருப்பேனா? என்பது தெரியாது” என்றார்.
இந்நிலையில் ஓவைசியின் பேச்சுக்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அரசியலமைப்பு சட்டப்படி, யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம். அதில் எந்த தடையும் இல்லை.
ஆனால் இந்தியா ஒரு இந்து நாடு, இந்து நாகரிகம், இந்திய பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். மேலும் இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமர் ஆவார் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.






