பீகாரில் 42 லட்சம் பேர் இருப்பிடங்களில் இல்லை- தேர்தல் கமிஷன் தகவல்

பீகாரில் நடத்தப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்த பணியில் 42 லட்சம் பேர் இருப்பிடங்களில் இல்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
ஜூலை.
பீகாரில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. வரும் 25-ந் தேதியுடன் இந்த பணி நிறைவு பெற உள்ள நிலையில் பீகார் வாக்காளர்கள் 7.89 கோடி பேரில் 6.96 கோடி பேர் மனு கொடுத்துள்ளனர். இதில் 1.59 சதவீத வாக்காளர்கள் இறந்து விட்டதும், 2.2 சதவீதம் பேர் நிரந்தரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதும், 0.73 சதவீதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷனின் பரிந்துரையின்படி பீகார் மாநிலத்தில் 12 ஆயிரத்து 817 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 895-ல் இருந்து 90, ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் 12 ஆயிரத்து 479 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ளவற்றை கொண்ட அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அருகில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் மாவட்ட வாரியான பட்டியல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எந்த வாக்குச்சாவடியிலும் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை.
சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி வெளியிடப்படும். வரும் 25-ந் தேதிக்கு பிறகு கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்கப்படாத பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது. பீகாரில் 41.64 லட்சம் வாக்காளர்கள் அவர்களது இருப்பிடங்களில் வசிக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






