போலீசாரின் வாகன சோதனையின்போது விபத்து; 4 வயது சிறுமி உயிரிழப்பு

மருத்துவ அவசரத்தை கருத்தில் கொள்ளாமல் போலீசார் நடந்து கொண்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது அவர் தனது 4 வயது குழந்தை ஹிருதிக்ஷாவை நாய் கடித்துவிட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு இருசக்கர வாகனம் உரசியதில், குழந்தை ஹிருதிக்ஷா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியது.
நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த விபத்தில், குழந்தை ஹிருதிக்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மருத்துவ அவசரத்தை கருத்தில் கொள்ளாமல் போலீசார் நடந்து கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 துணை சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






