ரேணுகாசாமி கொலை செய்யப்படுவார் என நினைக்கவில்லை... போலீசாரிடம் நடிகை பவித்ரா கவுடா பரபரப்பு வாக்குமூலம்
ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதால் ரேணுகாசாமியை செருப்பால் அடித்தேன் என்று நடிகை பவித்ரா கவுடா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி நடிகை பவித்ரா கவுடா. இவர்கள் 2 பேரும் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த 8-ந் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் காமாட்சிபாளையம் அருகே சும்மனஹள்ளி மேம்பாலத்தையொட்டி இருக்கும் சாக்கடை கால்வாயில் வீசப்பட்டது.
இதுதொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது போலீஸ் காவல் நாளை(திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது.
இதற்கிடையில், ரேணுகாசாமி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நடிகை பவித்ரா கவுடா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசாரிடம் நடிகை பவித்ரா கவுடா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
"எனக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியது குறித்து உதவியாளர் பவனிடம் கூறி இருந்தேன். அந்த குறுந்தகவல், ஆபாச படம் பற்றி நடிகர் தர்ஷனிடம் பவன் கூறி இருந்தார். இதையடுத்து, ரேணுகாசாமியை பிடித்து மிரட்டுவார்கள் என்று தான் நினைத்திருந்தேன். கடந்த 8-ந் தேதி பட்டணகெரேவுக்கு நானும், தர்ஷனும் சென்றோம். எனக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியது பற்றி ரேணுகாசாமியிடம் கேட்டேன். இதற்காக நான், அவரை செருப்பால் அடித்தது உண்மை.
அதன்பிறகு, நானும் தர்ஷனும் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டோம். இந்த விவகாரத்தில் ரேணுகாசாமி கொலை செய்யப்படுவார் என்று நினைக்கவில்லை. இந்த கொலைக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு ரேணுகாசாமி ஆபாச குறுந்தகவல் அனுப்பியது பற்றி போலீசாரிடம் புகார் அளித்திருக்க வேண்டும். அதனை செய்ய தவறி விட்டதால், இந்த வழக்கில் நானும் சிக்கி இருக்கிறேன்."
இவ்வாறு பவித்ரா கவுடா தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.