ஆமதாபாத் விமான விபத்து:144 பேரின் டி.என்.ஏ. உறுதி செய்யப்பட்டது

விமான விபத்தில் சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
ஆமதாபாத்
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் (வயது 68) பலியானார்.
உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 135 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் அவர்களது உறவினர்களுடன் பொருந்தியுள்ளன. அவற்றில் 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குஜராத், மராட்டியம், பீகார், ராஜஸ்தான் மற்றும் டையூவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டி.என்.ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.






