விமான விபத்தில் உயிரிழந்த புதுப்பெண்; கணவருடன் சேர்ந்து வாழ சென்றபோது சோகம்

திருமணமான 12 நாட்களில் வசந்த் இங்கிலாந்து சென்றுவிட்டார்.
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ மாணவர் விடுதியில் 7 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத்தின் மெக்சனா மாவட்டத்தை சேர்ந்த புதுப்பெண் அங்கிதாவும் அடக்கம். அங்கிதாவுக்கும் வசந்த் (வயது 30) என்பவருக்கும் கடந்த டிசம்பர் 14ம் தேதி திருமணம் நடைபெற்றது. வசந்த் இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடி (டிப்பார்ட்பெண்ட் ஸ்டோர்) நடத்தி வருகிறார்.
திருமணமான 12 நாட்களில் வசந்த் இங்கிலாந்து சென்றுவிட்டார். அவரது மனைவியான புதுப்பெண் அங்கிதா கணவருடன் சேர்ந்த்து இங்கிலாந்தில் வாழ நினைத்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட நடைமுறைகளை நிறைவு செய்து நேற்று ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார்.
ஆனால், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அங்கிதா உயிரிழந்தார். கணவருடன் இங்கிலாந்தில் வாழ்வதற்காக சென்ற அங்கிதா விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






