டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட்டு கவலை - வழக்கறிஞர்கள் காணொலி மூலம் ஆஜராக அறிவுறுத்தல்

காற்று மாசு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும் என நீதிபதி கவலை தெரிவித்தார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி அதுல் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
அப்போது பேசிய நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, “நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. வழக்கறிஞர்கள் ஏன் நேரில் ஆஜராகிறீர்கள்? காணொலி காட்சி மூலம் ஆஜராகும் வசதி இருக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த காற்று மாசு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வழக்கறிஞர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கிறோம்” என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “முகக்கவசம் அணிவது மட்டும் போதுமானதாக இருக்காது. அது இந்த பிரச்சினைக்கு தீர்வாகாது. இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கு வரும் 17-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.






