அமித்ஷா குறித்து குற்றச்சாட்டு: மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய சுவேந்து அதிகாரி


அமித்ஷா குறித்து குற்றச்சாட்டு: மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய சுவேந்து அதிகாரி
x

மம்தா பானர்ஜியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் ஐ.டி. பிரிவுத் தலைவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைகளை கண்டித்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மாபெரும் பேரணி நடத்தினார்.

இதன் பின்னர் பேசிய அவர், “நிலக்கரி ஊழல் பணம் டெல்லியில் உள்ள தலைவர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதை நான் வெளியிடுவேன்.

நிலக்கரி ஊழல் பணம் பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி மூலம் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு போயிருக்கிறது. அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது. நான் வழக்கமாக எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் யாராவது என்னைத் தூண்டிவிட்டால், நான் அவர்களை விடமாட்டேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டில் தன்னை தொடர்புபடுத்திய மம்தா பானர்ஜிக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எனக்கு எதிராக முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும், என்னையும் நிலக்கரி ஊழலுடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.

தனிப்பட்ட அவமதிப்புகளுடன் கூடிய இந்த பொறுப்பற்ற பேச்சு, எந்த ஆதாரமும் இல்லாமல் பகிரங்கமாக பேசப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது மட்டுமல்லாமல், பொது விவாதத்தின் கண்ணியத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.

அடுத்த 72 மணி நேரத்திற்குள் மம்தா பானர்ஜி, அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் வழங்க வேண்டும் என்று கோரி எனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவ்வாறு செய்யத் தவறினால், மம்தா பானர்ஜி மீது அவதூறுக்கு வழக்கு தொடருவேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story