பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது


பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது
x
தினத்தந்தி 4 Jun 2025 1:13 PM IST (Updated: 4 Jun 2025 3:21 PM IST)
t-max-icont-min-icon

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சண்டிகர்,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பின்புலமாக இருந்தது பாகிஸ்தானும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் என்பது வெட்ட வெளிச்சமானது.

இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை ராணுவம், பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் எடுத்து வருகிறார்கள். இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை கொடுத்ததாக அரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்பட12 உளவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 'ஜான் மஹால்' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜஸ்பிர் சிங்கிற்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020 முதல் 3 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார் ஜஸ்பிர் சிங். பாகிஸ்தானிற்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்கோத்ரா கைதான பின், ஐஸ்பிர் சிங் தன்னிடம் இருந்த தகவல் தொடர்பு ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பஞ்சாப் போலீசார் கூறுகையில், ஜஸ்பிர் சிங் பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரியான ஷாகிஸ் என்கிற ஜுத் ரன்தாவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஜஸ்பிர், 2020, 2021 மற்றும் 2024 என மூன்று முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார்.

ஜஸ்பிர் சிங்கின் மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது பல்வேறு பாகிஸ்தானை சேர்ந்த தொடர்பு எண்கள் அழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இவர் அரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். அதேபோல், பாகிஸ்தானியரான, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி ஈஷன் உர் ரஹீம் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது என்று கூறினர்.

1 More update

Next Story