சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் விடுவிப்பு


சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் விடுவிப்பு
x

டெல்லி கோர்ட்டின் சிறப்பு நீதிபதி திக் வினய் சிங், வழக்கில் இருந்து சஜ்ஜன் குமாரை விடுவித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

புதுடெல்லி,

1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட இந்த கலவரம் தொடர்பான சம்பவத்தில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் 2,733 பேர் பல்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக டெல்லியில் 587 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அவற்றில் 240 வழக்குகள் மூடப்பட்டு விட்டன. 250 வழக்குகள் கைவிடப்பட்டன. 28 எப்.ஐ.ஆர். தொடர்பான வழக்குகளிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில், 400 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் உள்பட 50 பேர் கொலை குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கலவரத்தின்போது, ஜனக்புரி மற்றும் விகாஸ்புரி பகுதிகளில், சஜ்ஜன் குமார் வன்முறையை தூண்டி விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணை டெல்லி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சிறப்பு நீதிபதி திக் வினய் சிங், வழக்கில் இருந்து சஜ்ஜன் குமாரை விடுவித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். உத்தரவு தொடர்பான விரிவான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு விசாரணை குழுவானது, 2015-ம் ஆண்டில் 2 எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்திருந்தது. அதில் ஒன்று, ஜனக்புரியில் சோகன் சிங், அவருடைய மருமகன் அவதார் சிங் படுகொலையுடன் தொடர்புடையது. மற்றொன்று, விகாஸ்புரியில் குர்சரண் சிங் மரணத்துடன் தொடர்புடையது. அவர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, வழக்கு விசாரணை தீவிரமடைந்தது.

சஜ்ஜன் குமார் இன்று விடுவிக்கப்பட்டபோதும், டெல்லியில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவருடைய மகன் தருண்தீப் சிங் படுகொலை வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த வழக்கு விசாரணையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், சிறையிலேயே தொடர்ந்து இருப்பார் என கூறப்படுகிறது. அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என கூறப்படுகிறது.

1 More update

Next Story