கணவருடன் வாக்குவாதம்; ஆத்திரத்தில் மகளை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்ற தாய்

மோனாலிசா கடந்த 2 ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் மல்காஜ் கிரி பகுதியை சேர்ந்தவர் முகமது சுலைமான் என்னும் டேவிட் (வயது 49). இவருடைய மனைவி மோனாலிசா (வயது 37). 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு சாம்சன் (வயது 10) என்ற மகனும், ஷெரோன் மேரி (வயது 7) என்ற மகளும் உள்ளனர். மோனாலிசா கடந்த 2 ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் அடிக்கடி பிள்ளைகளிடமும் கோபத்துடன் நடந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மகள் ஷாரோன் தாயின் செல்போனை எடுத்து கேம் விளையாடி கொண்டிருந்தாள்.
ஏற்கனவே கோபத்தில் இருந்த மோனாலிசா என் போனை எதற்காக எடுத்தாய் என்று கேட்டு, உன்னை கொன்று விட்டு நானும் செத்து விடுகிறேன். அப்பொழுதுதான் இந்த பிரச்சினைகள் எதுவுமே இருக்காது என்று கூறியபடியே மகளை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார்.
இதில் படிக்கட்டில் விழுந்த ஷாரோன் ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்தார். உடனடியாக டேவிட், மகளை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். ஆனால் சிறுமி உயிரிழந்து விட்டாள் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மோனாலிசாவை கைது செய்தனர்.
கணவருடனான வாக்குவாதத்தில், மகளை தள்ளிவிட்டு தாய் கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மோனாலிசாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






