பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: இந்திய ராணுவம் எச்சரிக்கை


பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: இந்திய ராணுவம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 May 2025 9:29 AM IST (Updated: 10 May 2025 9:58 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரின் ராஜோரியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் முயற்சிக்கும் நிலையில், இந்தியா அதை முறியடித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மட்டும் இன்றி ராஜஸ்தான் உள்பட எல்லையோர மாநிலங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது. இதற்கிடையே, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஷெல் தாக்குதலையும் பாகிஸ்தான் தொடர்ந்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதனால் எல்லைப்பகுதியில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில், பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என்று இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. இந்திய இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக, நேற்றும் காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத்தின் பூஜ் வரையிலான 26 இடங்களை பாகிஸ்தான் டிரோன்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனை இந்தியா முறியடித்துள்ளது. பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோடா, ஜம்மு, பெரோஸ்பூர், பதன்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், புஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்கள் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களால் குறிவைக்கப்பட்டன.

இதில் பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் ஒரு குடியிருப்புப் பகுதியில் ஆயுதமேந்திய ட்ரோன் ஒன்று தாக்கியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அந்தப் பகுதி பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story