பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழப்பு

சிறுவன் தகாத எண்ணத்தில் தன்னை நெருங்குவதை அறிந்த அப்பெண், எதிர்ப்பு தெரிவித்ததுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
இட்டாநகர்,
ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 40 வயது பெண் ஒருவர், வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். சிறுவன் தகாத எண்ணத்தில் தன்னை நெருங்குவதை அறிந்த அப்பெண், எதிர்ப்பு தெரிவித்ததுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அச்சிறுவன், கம்பு மற்றும் அரிவாளால் பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றான். பெண் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை அங்கிருந்தவர்கள் கண்டனர். உடனடியாக அவர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பெண்ணுக்கு 5 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் கிடந்த பேனா உள்ளிட்டவற்றை கைப்பற்றி, சிறுவனை கைதுசெய்தனர். விசாரணையின் போது, சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். மேலும், சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கில் 14 வயது சிறுவனால் 40 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






