அயோத்தி ராமர் கோவிலில் இன்று காவிக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி

ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
அயோத்தி ராமர் கோவிலில் இன்று காவிக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி
Published on

அயோத்தி,

பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு செல்கிறார். அங்கு ராமர் கோவில் கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றி வைக்கிறார். ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி உரையாற்றுகிறார்.

10 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்ட முக்கோண வடிவ கொடியில், ராமரின் வீரத்தையும், அறிவுக்கூர்மையையும் சித்தரிக்கும்வகையில் சூரியன் படமும், ஓம் என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டு இருக்கும். அயோத்தியில் தங்கி இருக்கும்போது, வால்மீகி, விசுவாமித்திரர் உள்ளிட்டோருக்கு சன்னதி அமைந்துள்ள சப்த மந்திர் மற்றும் சேஷாவதார் மந்திருக்கு சென்று பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். மாதா அன்னபூர்ணா கோவிலுக்கும் செல்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு சென்று விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக பிரதமர் அலுவலகம்  வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 25ம் தேதி (இன்று) உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோவிலுக்குச் செல்கிறார். காலை 10 மணியளவில், அங்கு மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோவில்களுக்கு சென்று பிரதமர் தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோவிலுக்கு செல்கிறார்.

காலை 11 மணியளவில், பிரதமர் அன்னை அன்னபூர்ணா தேவி கோவிலுக்குச் செல்கிறார். இதனையடுத்து, அவர் ராம் தர்பார் கர்ப்பக் கிரஹத்தில் தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து, குழந்தை ராமர் கர்ப்பக் கிரஹத்தில் அவர் தரிசனம் செய்கிறார்.

நண்பகல் 12 மணியளவில், அயோத்தியில் உள்ள புனிதமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோவிலின் சிகரத்தில் பிரதமர் மோடி, சம்பிரதாய ரீதியாக காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார். இது கோயிலின் கட்டுமானம் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதையும் குறிப்பதாக அமையும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில் பிரதமர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com