மதவாத சம்பவங்களை வங்காளதேசம் உறுதியாக கையாள வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

மதவாத சம்பவங்களை வங்காளதேசம் உறுதியாக கையாள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
வங்காளதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவ்வப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளது.
இந்து தொழில் அதிபர் தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டார். அதுபோல மேலும் 4 இந்துக்களும் தாக்கி கொல்லப்பட்டு உள்ளனர். இதையடுத்து இந்தியா இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
சிறுபான்மையினர் மீதும், அவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதும் பயங்கரவாதிகளால் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் தாக்குதல் போக்கை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம், இத்தகைய சம்பவங்களைத் தனிப்பட்ட விரோதங்கள், அரசியல் கருத்து வேறுபாடுகள் அல்லது வெளிக்காரணங்களுடன் வங்காளதேசம் தொடர்புபடுத்தும் தொந்தரவான போக்கையும் நாங்கள் கவனித்திருக்கிறோம். இத்தகைய அலட்சியம் குற்றவாளிகளை மேலும் தைரியப்படுத்துகிறது. இத்தகைய மதவாத சம்பவங்கள் விரைவாகவும், உறுதியாகவும் கையாளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






