பெங்களூரு கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி


பெங்களூரு கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 20 May 2025 9:19 AM IST (Updated: 20 May 2025 12:46 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தற்போது குறைந்துள்ள நிலையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.

தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்துள்ளன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு கனமழையின்போது மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு பிடிஎம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் மனோகர் கமத் (வயது 63). கனமழை காரணமாக இவர் வசித்துவரும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அவர் நேற்று மின்மோட்டார் உதவியுடன் வெள்ள நீரை வெளியேற்ற முயன்றுள்ளார். அவருக்கு நேபாளத்தை சேர்ந்த பரத் என்பவரின் மகனான சிறுவன் தினேஷ் (வயது 12) உதவி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்மோட்டாரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் அதில் நின்றுகொண்டிருந்த மனோகரை மின்சாரம் தாக்கியது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் தினேஷ், மனோகரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 35 வயது பெண் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story