ஊழல் வழக்குகளில் வெளியே வந்தவர்கள் எதிர்கட்சியினர் - பிரதமர் மோடி பேச்சு


ஊழல் வழக்குகளில் வெளியே வந்தவர்கள் எதிர்கட்சியினர் - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 24 Oct 2025 3:48 PM IST (Updated: 24 Oct 2025 6:08 PM IST)
t-max-icont-min-icon

ஆர்ஜேடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பீகாரின் அடுத்த தலைமுறையினர் அழிக்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

பாட்னா,

பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.இந்நிலையில் இன்று ஆளும் தேஜ கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். சமஸ்திபூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். எங்களுக்கு உத்வேகம் அளித்தார்.

இன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் நினைவு நாள். இந்த காங்கிரஸ் குடும்பம் அவரை எப்படி அவமதித்தது என்பதை நாடு ஒருபோதும் மறக்காது. தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை இன்று நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த மக்களுக்கு, அவர்களின் சொந்த குடும்பம் மட்டுமே மிக முக்கியமானது, காங்கிரஸ் கட்சித் தலைவர் சீதாராம் கேசரி நமது பீகாரின் பெருமை. காங்கிரஸ் குடும்பம் சீதாராம் கேசரியை அவரது வீட்டின் குளியலறையில் பூட்டி வைத்தது. அதுமட்டுமின்றி, அவரை தூக்கிச் சென்று நடைபாதையில் வீசினர். காங்கிரஸ் தலைவர் பதவியை அவரிடமிருந்து பறித்தனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் மோசடிகளில் ஈடுபட்டன. அவர்களின் தலைவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். கர்பூரி தாக்கூரின் விருதை திருட முயற்சி செய்தனர். பீகார் மக்கள் காட்டு ராஜ்ஜியத்தை புறம் தள்ளிவிட்டு, நல்லாட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். நிதிஷ் குமார் தலைமையில், தேஜ கூட்டணி இந்த முறை பீகாரில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்.

தற்போது ஒரு கப் தேநீரைவிட ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் குறைவு என்ற நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதனை 'சாய்வாலா' உறுதி செய்துள்ளார். பீகார் இளைஞர்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். நீங்கள் உருவாக்கும் ரீல்ஸ்கள் மற்றும் அனைத்து படைப்பாற்றல்களும் எங்கள் அரசாங்கத்தால்தான் நடந்தது. ஆர்ஜேடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பீகாரின் அடுத்த தலைமுறையினர் அழிக்கப்பட்டனர். பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். தலித்துகளின் நீதிக்கான கதவுகள் மூடப்பட்டிருந்தன.

பீகார் உள்பட முழு நாட்டையும் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிப்பேன் என உறுதி அளித்தேன். பீகாரில் நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் முதுகை உடைத்துவிட்டோம் என்பதை நான் பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் முழு நாடும் விடுபடும். நவம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story