பீகார் ஹிஜாப் சர்ச்சை; அரசு வேலையை உதறிய பெண் டாக்டர்

பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு நுஸ்ரத் சென்று விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது.
பாட்னா,
பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 10-வது முறையாக நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில், பாட்னா நகரில் கடந்த 15-ந்தேதி நடந்த அரசு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹிஜாப் அணிந்திருந்த பெண் ஆயுஷ் டாக்டர் ஒருவருக்கு சான்றிதழை வழங்கியபோது, அவரிடம், ஹிஜாப்பை நீக்குங்கள் என சைகை காட்டினார். அந்த பெண் அதனை கவனித்து செயல்பட முற்படுவதற்கு முன், பெண்ணின் வாய், கன்னம் தெரியும்படி அந்த பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து, கீழே இழுத்து விட்டார். மேடையில் இருந்த சிலர் சிரித்தபோது, துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, அவரை தடுக்க முயற்சித்தது வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ பரவியதும், காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிகள் அவரை கடுமையாக சாடியுள்ளன. அவருடைய மனநிலை முற்றிலும் பாதிப்படைந்து விட்டதற்கான சான்று இது என்றும் தெரிவித்தன. பெண்களுக்கு அதிகாரமளிப்போம் என கூறி விட்டு, பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளமும் என்ன வகையான அரசியலை செய்து வருகின்றனர் என அவர் தெளிவுப்படுத்தி விட்டார் என ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் அகமது கூறினார்.
அவருடைய செயல் வெட்கக்கேடானது மற்றும் வெறுப்பூட்டுகிறது என்றும் காங்கிரஸ் சாடியது. இந்த நிலையில், நுஸ்ரத் பர்வீன் என்ற அந்த பெண் டாக்டர் நாளை (சனிக்கிழமை) அரசு வேலையில் சேரவிருந்த சூழலில், பீகார் அரசு வேலையில் சேருவதில்லை என அவர் முடிவு செய்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இதுபற்றி நுஸ்ரத்தின் சகோதரர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவர் முற்றிலும் வெறுத்து விட்டார். இந்த சம்பவத்தில் அவர் கேவலப்படுத்தப்பட்டு உள்ளார். பீகார் அரசு வேலையில் அவர் சேரமாட்டார் என கூறினார்.
அது அவருடைய தவறு இல்லை என நாங்கள் எடுத்து கூறி அவரை சமரசப்படுத்த முயற்சித்து வருகிறோம். ஒரு சிலரின் செயலுக்காக, அவர் ஏன் பதவியை கைவிட வேண்டும்? என கேட்டுள்ள அவர், ஆனால் மனதளவில் பெரிய பாதிப்பை அடைந்திருக்கிறார். அதனால், வேலையில் அவர் சேரமாட்டார் என கூறினார். இந்நிலையில், பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு நுஸ்ரத் சென்று விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது.






