மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் யாரும் கோஷம் போடவில்லை: பிரியங்கா காந்தி


மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் யாரும் கோஷம் போடவில்லை: பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 15 Dec 2025 2:55 PM IST (Updated: 15 Dec 2025 5:03 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்ட மேடையில் பிரதமர் மோடிக்கு எதிராக எந்த முழக்கங்களும் எழுப்பப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிராக நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்..இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், 'பிரதமர் மோடிக்கு கல்லறை தோண்டப்படும், இன்று இல்லையேல் நாளை..' என்று முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.

மோடிக்கு எதிராக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு எதிராக அப்படி எந்த முழக்கங்களும் எழுப்பப்படவில்லை. மேடையில் அப்படி யாரும் சொல்லவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களில் யாரோ ஒருவர் அல்லது காங்கிரஸ் தொண்டர் ஒருவர், பிரதமர் மோடியை அப்படி கூறியதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.

ஆனால் அவ்வாறு முழக்கமிட்டது யார் என்று தெரியவில்லை. அப்படி யாரும் கூறியதாகவும் எங்களுக்குத் தெரியவில்லை. அப்படி இருக்க இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? நாடாளுமன்ற அவைகள் செயல்பட வேண்டும் என்று பாஜகவினர் நினைப்பதில்லை.நாங்கள் தில்லி காற்று மாசுபாடு குறித்து விவாதம் நடத்தக் கோரி வருகிறோம். ஆனால் அவர்கள் அதைச் செய்ய முன்வரவில்லை" என்று கூறினார்.

1 More update

Next Story