அடுத்த துணை ஜனாதிபதி யார்? பாஜக வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளவர்கள் விவரம்

புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்ய செப்டம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பதவி விலகுவதாகக் கடந்த மாதம் 21-ஆம் தேதி அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்யத் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்ய செப்டம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆலோசனை
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. வருகிற 21-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும்.மனுத் தாக்கலுக்கு இன்னும் நான்கு நாட்களே அவகாசம் உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே, துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.இந்த நிலையில், புதிய துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர்களாக யார்-யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர்கள் கடந்த 6-ஆம் தேதி இதுதொடர்பாகக் கூடி ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மோடிக்கு அதிகாரம்
அப்போது, துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்து அறிவிக்கும் அதிகாரத்தைப் பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க. தலைவர் நட்டாவுக்கும் வழங்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த நிலையில், இந்தியா கூட்டணித் தலைவர்களும் டெல்லியில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்தியா கூட்டணியில் உள்ள 12 கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது, பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதனால், இந்தியா கூட்டணி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர்களில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சித் தலைமையகத்தில் நடைபெற உள்ளது.
நாளை முக்கிய முடிவு
அந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். எனவே, நாளை மாலை துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.நாளை மாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டாலும், பா.ஜ.க. வேட்பாளர் யார் என்பதைப் பிரதமர் மோடி எப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 18 அல்லது 19-ஆம் தேதி அவர் வேட்பாளர் விவரத்தை அறிவிப்பார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பாஜக யாரை நிறுத்த போகிறது?
டெல்லி துணை நிலை கவர்னர் விகே சக்சேனா, பீகார் கவர்னர் ஆரிப் முகம்மதுகான், குஜராத் கவர்னர் ஆச்சர்யா தேவ்ரத், கர்நாடக கவர்னர் தவ்ரசந்த் கெலாட், சிக்கிம் கவர்னர் ஓ மாதூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோரது பெயர்கள் அடிபடுவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியாக கருதப்படும் சேஷாத்ரி சாரியின் பெயரும் அடிபடுவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் மட்டும் இன்றி தற்போது ராஜ்யசபா துணைத்தலைவராக உள்ள ஹரிவன்ஷ் பெயரும் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கவர்னர்கள் சமீப நாட்களில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணி வேட்பாளர் யார்?
பாரதிய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்படப் போவது யார் என்பதைப் பார்த்துவிட்டு, இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்கலாம் என்று ராகுல் காந்தி தீர்மானித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனால், துணை ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.இரு கூட்டணித் தலைவர்களும் துணை ஜனாதிபதி தேர்தலில் ரகசியத்தைக் கடைப்பிடிப்பதால், வருகிற செவ்வாய், புதன்கிழமைகளில் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படக்கூடும். 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இருக்குமா? இருக்காதா? என்பது உறுதியாகிவிடும்.
தேர்தல் எப்போது?
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இருக்கும்பட்சத்தில், அடுத்த மாதம் 9-ஆம் தேதி பாராளுமன்ற அலுவலகத்தின் முதல் மாடியில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும். பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வாக்களிப்பார்கள். இரு அவைகளிலும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளைவிட அதிக எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எனவே, பா.ஜ.க. அறிவிக்கும் வேட்பாளர் துணை ஜனாதிபதியாக எளிதில் தேர்வு செய்யப்படுவார். செப்டம்பர் 9-ஆம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடும்.






