நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பட்ஜெட் உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை, ஆளும் கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுகின்றனர். அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை' என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் கூறினார். தொடர்ந்து, ஜெகதீப் தன்கர், சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
மாநிலங்களவையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை எனக்கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி, 2.30 மணி, 3 மணி என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்துகொண்ட விதம் குறித்து தனது கவலையைத் தெரிவித்தார்.
தொடர் அமளி, வார்த்தை மோதல், வெளிநடப்பு காரணமாக மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர் மீண்டும் திரும்பாத நிலையில், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருகிற திங்கட்கிழமை வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒரு நாள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது.